கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்து வீட்டில் மது அருந்தியவர் போதை போதாததால் சரக்கு என நினைத்து டெட்டாலை எடுத்து குடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

கடலூர் மாவட்டம், முத்துநகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் நாகராஜ். மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்து வீட்டில் மது அருந்தியுள்ளார். வீட்டில் இருந்த மது காலியான நிலையில் அவருக்கு போதை ஏறியுள்ளது. 

ஆனால், அத்தோடு நிறுத்தாமல் மேலும் குடிக்க வேண்டும் என நினைத்த நாகராஜ் வீட்டில் வேறு சரக்கு இருக்கிறதா என தேடியுள்ளார். அப்போது வீட்டில் புண்களில் கிருமி தாக்காமல் இருக்க போடப்படும் டெட்டால் இருந்துள்ளது. போதையில் அதை சரக்கு என நினைத்த நாகராஜ் அதை எடுத்து குடித்துவிட்டார். 

இதை அறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி பலியாகிவிட்டார். மதுபோதையில் ஒருவர் டெட்டாலை மது என நினைத்து குடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.