கடன் தொல்லையால் மனைவி, குழந்தைகள், தாய் ஆகிய 4 பேரை கொடூரமாக கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற ஜவுளிக்கடை உரிமையாளருக்கு தூக்கு தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

சென்னை பம்மல் நந்தனார் தெரு ரங்கநாதன் அபார்ட்மென்டில் வசித்து வந்தவர் தாமோதரன் என்கிற பிரகாஷ் (40), பம்மல் பகுதியில் ஜவுளிக்கடை நடத்தினார். இவரது மனைவி தீபா (35), மகன் ரோஷன் (7), இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். மகள் மீனாட்சி (4), யு.கே.ஜி. படித்து வந்தார். இவர்களுடன் தாய் சரஸ்வதி (60) இருந்து வந்தார். தாமோதரனுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. கடந்த 2017 டிசம்பர் 12-ம் தேதி  குடும்பத்துடன் தற்கொலை செய்வது தொடர்பாக மனைவியுடன் கடும் வாக்குவாதம் செய்துள்ளார். பிறகு மனைவி மற்றும் தாய் சரஸ்வதியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்பு தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் ரோஷன், மீனாட்சி ஆகியோரை கத்தியால் குத்தி கொலை செய்தார். தானும் கழுத்தை அறுத்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். 

இது தொடர்பாக உடனே உறவினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 4 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தாமோதரனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சையில் தாமோதரன் மட்டும் உயிர் பிழைத்தார். 

இதனையடுத்து, வீட்டில் தாமோதரன் எழுதிய ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் நான் எவ்வளவோ முயன்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தேன். ஆனால், மத்திய அரசின் பண மதிப்பு இழப்பால் ஜவுளி தொழிலில் வளர்ச்சி அடைய முடியவில்லை. விலைவாசியும் அதிகமாக இருந்ததால், கடன் வாங்கி கடன் வாங்கி வாழ்ந்தேன். கடன் அதிகமானது. இப்படியே சென்றால், என் குடும்பத்தை போல் பலர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என்று கூறியிருந்தார்.

மேலும் தாமோதரன் போலீசாரிடமும், நீதிபதியிடமும் இதேபோல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தார். இதுதொடர்பான வழக்கு செங்கல்பட்டு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கடன் தொல்லையால் குடும்பத்தை கொலை செய்த தாமோதரனுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.