ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் சாருபுஜ்ஜிலி கிராமத்தில் பேய்கள் நடமாட்டம் இருப்பதாக கூறி கடந்த இரண்டு நாட்களாக கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வராத நிலை இருந்து வருகிறது இந்நிலையில் மாவட்ட எஸ்பி தலைமையில் போலீஸ் குழு கிராமத்துக்கு சென்று மக்களின் பயத்தை போக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் சாருபுஜ்ஜிலி கிராமத்தில் பேய்கள் நடமாட்டம் இருப்பதாக கூறி கடந்த இரண்டு நாட்களாக கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வராத நிலை இருந்து வருகிறது
இந்நிலையில் மாவட்ட எஸ்பி தலைமையில் போலீஸ் குழு கிராமத்துக்கு சென்று மக்களின் பயத்தை போக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எத்தனை அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிகள் வந்தாலும் மக்களின் கல்வி வளர்ச்சி அதிகரித்தாலும், மூடநம்பிக்கை பழக்க வழக்கங்கள் என்பது நம் சமூகத்தில் மண்டிக் கிடக்கிறது. படித்தவர்கள் கூட அர்த்தமற்ற பழக்கவழக்கங்களை பின்பற்றி அதனால் பண விரையத்திற்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் அதீத மூட நம்பிக்கைகள் சமூகத்தில் அமைதியற்ற நிலைமையையும், அசவுகரியங்களையும் ஏற்படுத்தி விடுகின்றன. அந்த வரிசையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பேய்கள் நடமாட்டம் இருப்பதாக கூறி ஒரு கிராமமே அஞ்சி வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் விநோதம் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் சாருபுஜ்ஜிலி கிராமத்தில் சமீபத்தில் சிலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். ஒருவர் பின் ஒருவர் உயிரிழந்ததால் பீதியடைந்த கிராம மக்கள் இது பிணம் தின்னும் காட்டேரியின் வேலை என சந்தேகமடைந்தனர். இந்த பேச்சு மெல்ல கிராமம் முழுவதும் பரவியது. இதனால் மொத்த கிராமமும் பீதி அடைந்து, காட்டேரி களிடமிருந்து காத்துக் கொள்வதற்காக ஏப்ரல் 17 முதல் 25 வரை கிராம மக்கள் வீட்டில் இருந்து வெளிவர வேண்டாமென அறிவித்து வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். கொரோனா காலத்தில்கூட இந்த அளவிற்கு அங்கு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் கிராம எல்லையில் பூஜை செய்து, முள் வேலி போட்டு எல்லை மூடப்பட்டுள்ளது. வெளியூர்க்காரர்கள் கிராமத்திற்குள் எவரும் நுழையாதவாறும், கிராமத்தில் இருந்து எவரும் வெளியேறாத வண்ணம் அவ்வாறு செய்யப்பட்டுள்ளது.
இந்த விநோக கிராமம் ஒடிசா எல்லையை ஒட்டியுள்ளது. இந்த ஊரடங்கு தீய சக்திகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்று கிராம மக்கள் நம்புகின்றனர். அதேபோல் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் கிராமத்தில் உள்ள அரசு அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. கிராமத்திற்குள் யாரும் நுழைய முடியாதவாறு வேலி போடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மருத்துவ பணியாளர்கள் ஊழியர்கள் என எவருமே கிராமத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில்தான் இது பற்றி தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் மாவட்ட எஸ்.பி தலைமையில் போலீசார் கிராமத்துக்குச் சென்ற மக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் போலீசார் உட்பட உள்ளூர் அதிகாரிகள் கிராமத்தைச் சென்று மக்களை சந்தித்தனர்.

இந்நிலையில் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் இயல்பாக இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே விரைவில் அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல குழுக்கள் மூலமாக அக்கிராம மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தங்கள் கிராமத்தில் ஏற்பட்ட மரணத்திற்கு அங்கு சுற்றித் திரியும் தீய ஆவிகள் தான் காரணம் என கிராம மக்கள் நம்பியதே இதற்குக் காரணம். இந்நிலையில் கிராம பெரியவர்கள் ஒடிசா மற்றும் அண்டை மாவட்டங்களில் ஆலோசனை நடத்தியதாகவும் அதன் பேரிலேயே அவர்கள் முழு அடைப்பை மேற்கொண்டதாகவும் கூறியுள்ளனர். இந்நிலையில் கிராமத்தில் நான்கு திசைகளிலும் எலுமிச்சை பழம் நசுக்கப்பட்டு நான்கு எல்லைகளிலும் பூஜை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
