டெல்லியில் பட்டப்பகலில் 17 வயது பள்ளி சிறுமியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியில் பட்டப்பகலில் 17 வயது பள்ளி சிறுமியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

டெல்லி துவாரகா மாவட்டத்தில் இன்று காலை 9 மணியளவில் 17 வயது பள்ளி மாணவி பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அந்த சிறுமியின் முகத்தில் ததிடீரென ஆசிட்டை வீசி விட்டு வேகமாக சென்றுள்ளனர். இதில், அவரது முகம், கண்களில் பாதிப்பு ஏற்பட்டு வலியால் துடித்துள்ளார். 

உடனே இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில் அந்த சிறுமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மாணவி மீது ஆசிட் வீசுவது தொடர்பாக வீடியோ காட்சிகள் இடம் பெற்றிருந்தது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய சம்பவம் தலைநகர் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.