டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை: பகீர் தகவல்கள் - மகளிர் ஆணையம் நோட்டீஸ்!
டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக அம்மாநில போலீஸுக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
டெல்லியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரின் தந்தையை கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காலமாகியுள்ளார். இதனால், நிர்கதியான அச்சிறுமி, தனது தந்தையின் குடும்ப நண்பரான டெல்லி அரசு அதிகாரி ஒருவரது வீட்டில் தங்கியுள்ளார். அந்த சமயத்தில் அச்சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அச்சிறுமியை அவர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து, 2021ஆம் ஆண்டு ஜனவரியில் அச்சிறுமி தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார். தொடர்ந்து, அச்சிறுமியை அந்த அரசு அதிகாரி சந்திக்கும்போதெல்லாம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாலியல் வன்கொடுமையால் அச்சிறுமி கர்ப்பமடைந்தபோது, அந்த அதிகாரியின் மனைவி அச்சிறுமிக்கு கர்ப்பத்தை கலைக்கும் மாத்திரைகளை கொடுத்து கர்ப்பத்தை கலைக்க உதவி புரிந்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் பணிபுரியும் அந்த அதிகாரியையும், அவரது மனைவியையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் மீது போக்சோ, கிரிமினல் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக அம்மாநில போலீஸுக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில், “குற்றம் சாட்டப்பட்ட அந்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாரா? அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்கள்? அவர் மீது கடந்த காலத்தில் பெறப்பட்ட வேறு ஏதேனும் புகார்கள் அளிக்கப்பட்டிருந்தா அதன் விவரங்கள்?” உள்ளிட்டவற்றை அளிக்குமாறு டெல்லி காவல்துறையிடம் மகளிர் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்த விரிவான அறிக்கையை ஆகஸ்ட் 23ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அந்த நோட்டீஸில் டெல்லி மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, பாதிக்கப்பட்ட மாணவி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன்பு டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பாதிக்கப்பட்ட மாணவியை சந்திக்க தனக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இதனிடையே, குற்றம் சாட்டப்பட்ட அந்த அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். மேலும், இந்த விவகாரம் குறித்து இன்று மாலை 5 மணிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தலைமைச் செயலாளருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்துக்கு பாஜக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. “டெல்லி அரசு அதிகாரி ஒருவர் மைனர் சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தது மிகவும் வெட்கக்கேடானது. இந்த சம்பவத்தை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.” என மறைந்த சுஷ்மா சுவராஜின் மகளும், பாஜக நிர்வாகியுமான பன்சுரி சுவராஜ் தெரிவித்துள்ளார். மேலும், “ஆகஸ்ட் 13ஆம் தேதி எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டபோதும், அந்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய ஏன் இவ்வளவு கால தாமதம் ஆனது? அமைச்சர் அதிஷி இந்த விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன்?” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி, “இந்த சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது; அதிர்ச்சி அளிக்கிறது. டெல்லி காவல்துறை மற்றும் நீதி அமைப்பு அந்த அதிகாரிக்கு எதிராக விரைவான மற்றும் வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.