கன்னியாகுமரி மாவட்டம். கருங்கல் பகுதியில் நள்ளிரவு நேரங்களிலும், ஆள் நடமாட்டம் குறைவானா பகுதிகளிலும் இளைஞர்கள் பைக் ரேஸ்  நடத்துவது அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் படி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இளைஞர்கள் போதையில் வாகனம் ஓட்டுவது தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து, கடந்த சில வாரங்களுக்கு முன் கஞ்சா பொட்டலங்களுடன் வாலிபர் ஒருவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. வெளியூர்களில் இருந்து கஞ்சாவை மூட்டைகளில் வாங்கி வந்து ரகசிய இடங்களில் வைத்து சிறிய பொட்டலங்களாக பிரித்து ஒரு பொட்டலம் ரூ.400.500 என விற்பனை செய்துள்ளனர்.

போதை பொருட்கள் விற்பனையில், பத்து மடங்குக்கும் அதிகமாக லாபம் கிடைப்பதால் பட்டதாரிகள் உட்பட பலர் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப போதை ஊசி, போதை மாத்திரைகளையும் சப்ளை செய்வதாகவும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.இதையடுத்து, கருங்கல் உதவி ஆய்வாளர் மோகன ஐயர் தலைமையில் போலீசார் கஞ்சா கும்பலை கூண்டோடு பிடிக்க வியூகம் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் கடந்த சில தினங்களுக்கு முன் சந்தேகத்தின் அடிப்படையில் சில வாலிபர்கள் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் கஞ்சா கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் மேலும் சிலர் குறித்த தகவல்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக, கருங்கல் ஆர்.சி தெருவை சேர்ந்த ஜீனு, திப்பிறமலையை சேர்ந்த தாசன், பள்ளியாடியை சேர்ந்த கென்சோ, கீழ்குளம் பகுதியை சேர்ந்த ஜெரோம்மேக்ஸ், பள்ளியாடியை சேர்ந்த தினேஷ்ராஜ், ஆர்.சி தெருவை சேர்ந்த ஜான்கபோடு ஆகிய ஆறு பேரை கைது செய்தது போலீஸ்., அவர்களிடம் இருந்து நான்கு கிலோ கஞ்சா மற்றும் போதை ஊசி மற்றும் மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.