ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா தீட்சித் மற்றும் நீதிபதி ஜே எம் காசி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது. மூன்று நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
ஹிஜாப் விவகாரம் தொடர்பாக தீர்ப்பு வழங்கிய 3 நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழக இளைஞரை பிடித்து கர்நாடக போலீசார் விசாரித்து வருவதாக அம்மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா தகவல் தெரிவித்துள்ளார்.
ஹிஜாப் விவகாரம்
கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிவதற்கு கடந்த பிப்ரவரி மாதம் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்தனர். எனினும் அவர்கள் பள்ளி வளாகத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

பின்னர், கர்நாடகாவின் பிற பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களிலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனிடையே, ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவியரில் சிலர் காவி துண்டு அணிந்து வரத் தொடங்கியதால் பதற்றம் அதிகரித்தது. இதனையடுத்து, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
கர்நாடகா ஐகோர்ட் தீர்ப்பு
இந்நிலையில், ஹிஜாப் தடையை எதிர்த்து மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜேஎம் காசி அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியது. அதில், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்டத் தடை தொடரும் என கூறிய நீதிபதிகள் மாணவிகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில் ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா தீட்சித் மற்றும் நீதிபதி ஜே எம் காசி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது. மூன்று நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தமிழக இளைஞர் கைது
இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ரஹமத்துல்லா என்பரை மதுரையில் இருந்து விசாரணைக்கு கர்நாடகா போலீசார் அழைத்து வந்துள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எட்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது என்று அவர் கூறினார். ஹிஜாப் விவகாரம் தொடர்பாக தீர்ப்பு வழங்கிய 3 நீதிபதிகளுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
