திருச்சி அருகே உள்ள நாச்சிக்குறிச்சியை சேர்ந்தவர் பாபு  இவரது மனைவி ராதா இவர்களுக்கு அஜன் ,  அம்ரிஸ்ராமச்சந்திரன்  என்ற 2 மகன்கள் உள்ளனர்.

பாபு சென்னை சிட்லப்பாக்கத்தில் உள்ள இந்தியன் வங்கியில் கேஷியராக வேலைப்பார்த்து வந்தார். பாபு குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்த  நிலையில் அவருக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.

இதையடுத்து பாபுவின் உடலை அவரது சொந்த ஊரான திருச்சி நாச்சிக்குறிச்சிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. பாபுவின் உடலை ஒரு ஆம்புலன்சில் ஏற்றி சென்னையில் இருந்து கொண்டு சென்றனர்.

ஒரு காரில் ராதா மகன்  அம்ரிஸ் ராமச்சந்திரன் மற்றும் பாபுவின் தாய் தங்கம்  மற்றும் ஒறவினர்கள் சென்றனர். இந்த காரை சென்னையை சேர்ந்த கோகுல் என்பவர் ஓட்டி சென்றார். மற்றொரு காரில் இன்னொரு மகன்  அஜன் மற்றும் உறவினர்கள் சென்றனர். இந்த கார்கள் ஆம்புலன்சை தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன.

அவர்கள் சென்ற கார்கள் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள ரவுண்டானாவை கடந்து சென்றது. அப்போது சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த  லாரி மீது கோகுல் ஓட்டி சென்ற கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் இருந்த ராதா, அவரது மகன் அம்ரிஸ் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் அந்த காரில் இருந்த உறவினர்கள்  படுகாயம் அடைந்தனர்.

உயிரிழந்த ராதா மற்றும் அவரது மகனின்  உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இதைப்பார்க்க பரிதாபமாக இருந்தது. விபத்தில் இறந்த அம்ரிஸ் ராமச்சந்திரன் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதற்குள் விபத்தில் சிக்கி அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.