உத்தரப் பிரதேசத்தில் தலித் இளைஞனை  திருமணம் செய்துகொண்ட பிஜேபி எம்.எல்.ஏ வின் பெண்ணுக்கு அவள் தந்தை கொலை அச்சுறுத்தல் விடுப்பதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப் பட வேண்டும் என்று கூறும் காட்சிப்பதிவு சமுக ஊடகங்களில் நேற்று பரவியது.

சாக்சி மிஸ்ரா, எனும் இவர் பரேய்லி மாவட்டத் தில் உள்ள பிதாரி செயின்பூர் தொகுதியிலிருந்து சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜேஷ் மிஸ்ராவின் மகள்.

இவர் உத்தரப்பிரதேச காவல்துறையிடம் தனக்கு பாதுகாப்பு வழங்கும்படி கோரும் காட்சிப்பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது. அதில், தனது தந்தை மற்றும் சகோதரரிடமிருந்து தொடர்ந்து மிரட்டல் வருகிறது என்றும் தன்னை அவர்கள் கொல்ல முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது தவிர, தனது தந்தையிடம் வேண்டுகோள் விடுக்கும்விதமாக சாக்சி தனி காணொலி ஒன்றையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் சாக்சி பேசுகையில் ''எனது முடிவில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னை பின்தொடர்ந்து குண்டர்களை அனுப்புவதை நிறுத்திவிட்டு, என்னை நிம்மதியாக வாழ விடுங்கள். எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. நாங்கள் உங்களிடமிருந்து ஓடி ஒளிந்து மிகவும் சோர்வாக இருக்கிறோம். அபி (சாக்சியின் கணவர்) மற்றும் அவரது உறவினர்களையும் தொந்தரவு செய் வதை நிறுத்துங்கள். அவர்கள் மீது எந்தத் தவறும் இல்லை. நான் தான் இம்முடிவுக்குக் காரணம். நான் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ விரும்புகிறேன்.'' என்று தனது தந்தைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் சாக்சி.

ராஜேஷ் மிஸ்ரா, நேற்று ஊடகங்களிடம் தெரிவிக்கையில், தனது மகள் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். எனக்கு எதிராக ஊடகங்களில் சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. என் மகள் சொந்தமாக முடிவெடுக்க அவருக்கு எல்லாவித  உரிமைகளும், சுதந்திரமும் உண்டு. நானோ என் குடும்பத்தைச் சார்ந்தவர்களோ என் மகளுக்கு எந்த வித கொலைமிரட்டலும் விடுக்கவில்லை. நாங்கள் எங்கள் வேலைகளில் பரபரப்பாக இருக்கிறோம். அவர் எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாக வாழலாம் இவ்வாறு பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தம்பதியினருக்கு பாதுகாப்பு வழங்கு வதற்காக.அவர்கள் உறுதிபூண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த தம்பதியினர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட காணொலியை நாங்கள் பார்த்துள்ளோம். பாதுகாப்பு கேட்டு அவர்கள் எங்களுக்கு எழுதினால், பின்னர் நாங்கள் நிச்சயமாக அதை வழங்குவோம் என்று பரேலி காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.