தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள விளாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி மகேஸ்வரி . இவர்களுக்கு அனுசியா என்பவர் உள்ளிட்ட 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் அனுசியா திருமானூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவழகன் இறந்து விட்டார். இதையடுத்து மகேஸ்வரி கூலி வேலை பார்த்து அதில் வரும் வருமானத்தை கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் அனுசியாவுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ்  என்பவருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். இவர்களின் காதலுக்கு மகேஷ்வரி ஆரம்பத்தில் இருந்தே  எதிர்ப்பை தெரிவித்து வந்தார். ஆனால் அனுசியா தனது காதலை கைவிடவில்லை.

இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுசியா திடீரென்று மாயமானார். இது பற்றி திருவையாறு மகளிர் போலீசில் அவரது தாய் புகார் செய்தார். அதில் எனது மகளை ஆனந்தராஜ் கடத்தி சென்றுவிட்டார் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

ஆனால் அனுசியா மீண்டும் வீடு திரும்பினார். காதலை கைவிட்டு படிப்பில் கவனம் செலுத்து என அனுசியாவிடம் பலமுறை மகேஸ்வரி தெரிவித்தும் பயனில்லை. இதன் காரணமாக அடிக்கடி தாய்-மகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. 

இதுகுறித்து அனுசியா தனது காதலன் ஆனந்தராஜிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் உன் தாய் இருக்கும் வரை நமது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டுதான் இருப்பார். அதனால் அவரை தீர்த்து கட்ட வேண்டும் என கூறி வந்தார். 

இந்த நிலையில் நேற்று இரவு அனுசியாவுக்கும், மகேஸ்வரிக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அனுசியா இரும்பு கம்பியால் மகேஸ்வரியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுசியாவை கைது செய்தனர்.மேலும் அவரது காதலன் ஆனந்தராஜையும் கைது செய்தனர். அவர்கள் 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.