கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுதா என்ற இளம் பெண் ஒருவர் டிக் டாக் செயலி மூலம், வீடியோ ஒன்றை சமூக கலைதளங்களில் வெளியிட்டிருந்தார். அதில்  பட்டியல் இன மக்களை மிகவும் தரக்குறைவாக பேசி இருந்தார்.

இந்த மோசமான வீடியோ கடந்த இரண்டு மாதங்களாக சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தாலும், தூத்துக்குடியைச் சேர்ந்த  வழக்கறிஞரான பி.மணிகண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் சுதா கைது செய்யப்பட்டுள்ளார்.

மணிகண்டன் அளித்த புகாரில்  பேஸ்புக்கில் வீடியோவை பார்த்ததாகவும், அந்தப் பெண் பயன்படுத்திய வார்த்தைகளால் அவமானப்படுவதாகவும் கூறினார்.அந்தப் பெண் தனது பேச்சில் எஸ்சி சமூகத்தில் பெண்களை இழிவுபடுத்தியதாகவும், தலித்துகள் வாழ்க்கையில் வர உதவிய அரசாங்கத்தின் இடஒதுக்கீடு முறை  குறித்து கேவலமாக பேசியதாகவும் கூறினார்.

"பிரபலமடைவதை நோக்கமாகக் கொண்ட இத்தகைய வீடியோக்கள் தலித்துகளின் உணர்வுகளை புண்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இரு சமூகங்களுக்கிடையில் மோதல்களைத் தூண்டுவதாகவும் இருந்தது" என்று மணிகண்டன் அந்த புகாரில் கூறியுள்ளார்..

இந்த புகாரின் அடிப்படையில் மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம் மற்றும் மொழி ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல், சமாதானத்தை மீறும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு  ஆகிய பிரிவுகளின் கீழ் சுதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து சுதாவை கைது செய்த காவல் துறையின் அவரை திருநெல்வேலி கொக்கிரக்குளம் பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்.