கோவிந்தராஜ் சரிவர வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு மனைவி, மகள்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த மாதம் கோவிந்தராஜ் குடித்துவிட்டு மகள்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த மகள் நதியா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே குடிபோதையில் 2 மகள்களை உருட்டுக்கட்டையால் அடித்து படுகொலை செய்த தந்தை, ஒரகடம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஒரகடம் அருகே சின்ன மதுரபாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (40). பேக்கரிகளில் ஸ்வீட் தயாரிக்கும் மாஸ்டர். இவரது மனைவி கீதா (38), நத்தாநல்லூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு நந்தினி (16), நதியா (14), தீபா (9) என்ற மூன்று மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில், கோவிந்தராஜ் சரிவர வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு மனைவி, மகள்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த மாதம் கோவிந்தராஜ் குடித்துவிட்டு மகள்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த மகள் நதியா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் போதையில் மீண்டும் கோவிந்தராஜ் தனது மனைவி, மகள்களுடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று காலை வழக்கம்போல் கீதா வேலைக்கு சென்றுள்ளார். அப்போது இவரது மகள்கள் நந்தினி, தீபா மற்றும் மகன் வீட்டில் இருந்துள்ளனர்.
அப்போது, போதையில் வந்த கோவிந்தராஜியிடம் இரு மகள்களும் சண்டையிட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையால் இரு மகள்களையும் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த இரண்டு மகள்களும் துடிதுடித்து உயிரிழந்தனர். அலறம் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்ததை அறிந்த கோவிந்ராஜ் அங்கிருந்து தப்பித்து சென்று காவல் நிலையத்தில் சரணடைந்தார். மது போதையில் தனது இரு மகள்களையும் உருட்டுக்கட்டையால் தந்தையே அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
