கத்தியால் தனது கையை துண்டாக வெட்டிக்கொண்ட முன்னாள் ராணுவ வீரர் செயலால் தேனியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம். கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் ராணுவத்தில் பணியாற்றி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்று குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கும், மனைவிக்கும் குடும்ப பிரச்சினை இருந்ததாகவும் கடந்த சில மாதங்களாக குடும்பத்துடன் பிரிந்து தனிமையில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருந்துள்ளார் வெங்கடேசன்.

இந்தநிலையில், காமயகவுண்டன்பட்டியில் இருந்து கம்பம் பகுதிக்கு வந்த வெங்கடேசன்,  புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கறிக்கடை ஒன்றில் நுழைந்துள்ளார். பின்னர், கறி வெட்டும் கத்தியை எடுத்து தனது கையை தனக்கு தானே வெட்டி துண்டாக்கி கொண்டதால்,  அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மற்றொரு கையை யாராவது வெட்டுங்கல் என்று கூறிக்கொண்டே கடையை விட்டு அவர் வெளியேறியுள்ளார். இந்த பதறவைக்கும் ச்சம்பவம் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வெங்கடேசனை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.