கடலூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம்(31). கூலி தொழிலாளி. இவருக்கும் காங்கிருப்பு கிராமத்தை சேர்ந்த லட்சுமி(29) என்பவருக்கும் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் பெற்றோரின் சம்மத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் 8 மாதங்களில் லட்சுமி குழந்தை பெற்றெடுத்தார். இதனால், அருணாசலம் அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்தார். இதனையடுத்து, லட்சுமி கோபித்துக் கொண்டு தன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர், இருவரையும் சமாதானம் செய்து ஒன்றாக வாழ வைத்தனர். ஆனால், தம்பதிக்குள் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து, அருணாசலம் தனது மனைவியை விவகாரத்து செய்ய கடலூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கணவன் மனைவிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், லட்சுமியை அருணாசலம் சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர், துணியால் லட்சுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். ஒரு கட்டத்தில் மனைவியை கொன்று விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் அருணாசலம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 

அப்போது, குழந்தையின் அழுகுரல் கேட்டு மனதை மாற்றிக்கொண்டார். பின்னர், நேற்று காவல் நிலையத்தில் சென்று நடந்தவற்றை கூறி சரணடைந்தார். இதனையடுத்து,சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்து அருணாசலத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நானும் எனது மனைவியும் திருமணம் செய்து கொண்ட நாள் முதல் மகிழ்ச்சியாக தான் இருந்தோம். ஆனால், திருமணமாகி 8 மாதத்திலேயே குழந்தை பிறந்தது. இதனால், எனக்கு அதிர்ச்சியும், சந்தேகமும் ஏற்பட்டது. இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது சரியான பதில் கூறாமல் மவுனம் காத்து வந்தாள். சம்பத்தன்று மனைவியிடம் தகராறில் ஈடுபட்டேன். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற நான் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர், நானும் தற்கொலை செய்வதற்காக முயற்சித்த போது குழந்தையின் அழுகுரல் கேட்டு மனம்மாறினேன். பின்னர், காவல் நிலையத்தில் சரணடைந்தேன் என்றார். இதனையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.