ஜாமீனில் வெளியே வந்த சில மணி நேரத்தில் புதுச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த ரவுடி முரளி என்பவன் கடந்த 2017-ம் ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மற்றொரு ரவுடி கும்பலான சுந்தர், அமரன் (எ) அமர்நாத் ஜெயகுமார் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் சுந்தர், அமரன் ஆகியோர் மட்டும் 2 வருடங்களாக மத்திய சிறையில் இருந்தனர். 

இந்நிலையில் முரளி கொலை வழக்கு தொடர்பான விசாரணை நேற்று புதுச்சேரி நீதிமன்றத்தில் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளிகள் 11 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். சுந்தர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருப்பதால், அவரால் வெளியே வர முடியவில்லை. அமரன் மட்டும் ஜாமீனில் வெளியே வந்தான்.

இந்நிலையில், முரளியின் ஆதரவாளர்கள் அமரனை கொலை செய்ய கொலை வெறியுடன் காத்திருந்தனர். இதை அறிந்த அவரது தந்தை மற்றும் மாமா இருவரும் அமரனை காரில் தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, வழியில், வடலூரை அடுத்த கருங்குழியில் அவர்கள் இறங்கியபோது பின் தொடர்ந்து வந்த 7 பேர் கும்பல், அமரனை கொடூரமாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அமரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற வந்த தந்தை பாண்டியனையும் வெட்டி விட்டு மர்மகும்பல் தப்பியது. 

இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அமரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த பாண்டியன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முரளி கொலை சம்பவத்திற்கு பழிக்கு பழியாக அவனது ஆதரவாளர்கள் விடுதலையான அன்றே அமரனை கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.