சி.ஆர்.பி.எப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதல் தொடர்பாக, 7 பேரை பிடித்து ஜம்மு-காஷ்மீர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர், புல்வாமா மாவட்டம், காக்கபோராவை சேர்ந்த 22 வயதான அகமது தர், பாகிஸ்தானில் இருந்து இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தில் கடந்த ஆண்டு சேர்ந்துள்ளான். சிஆர்பிஎஃப் வாகன அணிவகுப்பில், வெடிபொருள் நிரப்பிய வாகனத்தை மோதவிட்டு தாக்குதலை நிகழ்த்தியது இவனே எனக் கூறப்படுகிறது. வெடிபொருட்கள் துளைத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் நிகழ்ந்தவுடன் ஒரு உடல் 80 மீட்டர் தூரத்திற்கு தூக்கி எறியப்படும் அளவுக்கு பயங்கர சக்தி வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. 

100 மீட்டர் சுற்றளவுக்கு மனித உடல் பாகங்கள் சிதறி கிடந்துள்ளன. ஸ்கார்ப்பியோ எஸ்யுவி ரக காரில் ஆர்டிஎக்ஸ் வெடிபொருளை நிரப்பி வந்து தீவிரவாதி மோதியதாக தகவல் வெளியானது. ஆனால், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது செடான் ரக கார் என்றும் கூறப்படுகிறது. 

இதேபோல, வாகனத்தை சிஆர்பிஎஃப் பேருந்தின் மீது மோதவில்லை என்றும், அருகில் சென்றதும் டெட்டனேட்டர் பயன்படுத்தி வெடிபொருட்களை வெடிக்கச் செய்ததாகவும் கூறப்படுகிறது. எனவே பயன்படுத்தப்பட்ட வாகனம், வெடிபொருளின் தன்மை, அளவு, தாக்குதல் நிகழ்த்தப்பட்ட முறை போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தாக்குதல் நடைபெற்ற இடத்தில், தேசிய புலனாய்வு நிறுவன குழுவினர், தடயவியல் வல்லுநர்கள் உதவியுடன், மாதிரிகளை சேகரித்துள்ளனர்.

இதனிடையே, சிஆர்பிஎஃப் வாகன அணிவகுப்பு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் சோதனை செய்யப்பட்ட நெடுஞ்சாலையில், தீவிரவாதி நுழைய முடிந்தது எப்படி?, தாக்குதலுக்கு முன்னர் 10 கிலோமீட்டர் தொலைவில் ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்களுடன் யார் கண்ணிலும் படாமல் மறைந்திருந்தது எப்படி? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக புல்வாமா மற்றும் அவந்திபோராவை சேர்ந்த 7 பேரை பிடித்து ஜம்மு-காஷ்மீர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்தப்பட்ட அன்று இரவு இவர்கள் 7 பேரையும் சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தாக்குதலுக்கான சதித் திட்டம், புல்வாமா மாவட்டத்தின் ட்ரால் நகரில் மிடூரா என்ற பகுதியில் தீட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த நபர் ஒருவரையும் தேடி வருகின்றனர்.