மதத்தை காரணம் காட்டி காதலித்த பெண்ணை திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலியின் வீட்டின் முன்பு தீக்குளித்த இளைஞர் பரிதாபமாக பலியானார். நாடக காதல் நடத்தி, இளம் பெண்களை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு கொலை செய்யும் சில ஆண்கள் மத்தியில்,  நல்ல வேலை இருந்தும், காதலித்த பெண் கிடைக்காத ஏக்கத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மொய்தீன், இதே நிறுவனத்தில் எர்ணாவூர் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் தீபாவை ஒருவர் பணிக்குச் சேர்ந்தார். ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிய இருவரும், பீச் சினிமா என ஊர் சுற்றும் அளவிற்கு காதலர்களாக வலம் வந்தனர்..

வாழ்க்கையை சந்தோஷமாகவும், மற்ற காதலர்களை போல ரசித்து ரசித்து வாழ்ந்த இந்த காதல் ஜோடிக்கு, இரண்டு பக்கத்திலிருந்தும் மதம் சார்ந்து எதிர்ப்பு கிளம்பியது. இருந்தாலும் அந்த பெண்ணை கல்யாணம் செய்ய மொய்தீன் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. மதம் கடந்த காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் கல்யாணத்திற்கு தடை போட்ட நிலையில், மொய்தீனை தங்கள் மகள் சந்திப்பதைத் தடுக்கவே, அந்த பெண்ணை வேலைக்கு அனுப்பாமல் நிறுத்தி விட்டனர். இதனால் கடந்த 20 நாட்களாக அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொள்ள பலமுறை முயன்றும் மொய்தீனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து கையில் மண்ணென்னை கேனுடன் காதலியின் வீட்டிற்கு சென்ற மொய்தீன், ஏன் கல்யாணம் செய்து கொள்ள மறுக்கிறாய் என கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். காதலி தன்னை மறந்து விடுமாறு சொல்லிவிட்டு வீட்டுக்குள் ஓடிவிட அவரது குடும்பத்தினரும் மொய்தீனை அங்கிருந்து செல்ல சொல்லியிருக்கிறார்கள். இதையடுத்து காதலியின் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மன அழுத்தத்தால் விரக்தியிலிருந்த மொய்தீன் கான் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். உடலில் தீயுடன் வீதியில் ஓடிய அவரைக் காப்பாற்ற, வீட்டிலிருந்து ஓடி வந்த, அந்த பெண்ணுக்கும் தீ காயம் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தினர் மொய்தீன் உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பலத்த காயத்துடன் அனுமதிக்கப்பட்ட மொய்தீன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.