இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் அசுர வேகம் எடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாட்டில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என அரசு அறிவித்திருக்கிறது.

இதனிடையே மதுபானக் கடைகள் 44 நாட்களாக மூடப்பட்டிருந்ததால் குடிபோதையில் நிகழும் வன்முறை செயல்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக குறைந்திருந்தது. நேற்று மீண்டும் டாஸ்மாக் திறக்கப்பட்ட நிலையில் மாநிலத்தில் பல்வேறு கொலை, தகராறு போன்றவை நடந்துள்ளன. அவை பின்வருமாறு:

* திருச்சி ஸ்ரீரங்கம் மூலத் தோப்பு பகுதியில் மது போதையில் 4  இளைஞர்கள் மோதல். ஒருவருக்கு கத்திக் குத்து.

* மதுரை அலங்காநல்லூரில் கணவர் குடித்துவிட்டு தகராறு செய்ததால் மனைவி மற்றும் மகள் தற்கொலை

* திருச்சூழி அருகே மது போதையில் தங்கையை அண்ணனே கட்டையால் தாக்கி கொலை.

* ஆண்டிப்பட்டி அருகே உள்ள தங்கம்மாள் புரத்தில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட 7 பேரை கடமலைக்குண்டு காவல்துறையினர் கைது செய்தனர்.

* நெல்லை மாவட்டம் செட்டிகுளம் அய்யா கோவில் தெருவில் ராஜமணி என்பவருடைய மனைவி ஜெயமணி என்பவரை அவருடைய மகன் ராஜன்  என்பவர் மது போதையில் வீட்டை தனக்கு எழுதித் தரவில்லை என்று தலையில் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.

* திருச்சி துவாக்குடி, வாழவந்தான் கோட்டை பகுதியில் உள்ள பெரியார் நகரில் மதுபோதையில் இரு பிரிவினருக்கிடையே மோதல் நடந்ததில் இருவரின் மண்டை உடைப்பு.

* திருச்சியில் மது அருந்தியவர் கடை அருகிலேயே உயிரிழப்பு. அதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

* காரைக்குடியில் குடிபோதையில் தம்பியையும் தம்பி மனைவியையும் அரிவாளால் வெட்டிய அண்ணன் கைது

* குமரியில் இரு மதுபான கடைகளுக்கு தீ வைப்பு: பல லட்சம் மதுபாட்டில்கள் எரிந்து சேதம்.

* ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடையை மூட வைத்த பெண்கள். திறப்பதற்கு கடும் எதிர்ப்பு

நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் டாஸ்மார்க் விற்பனை 150-170 கோடி ரூபாய் வரையில் கிடைத்திருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.