கடலூர் அருகே பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் பாதிரியாருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் பாதிரியாருக்கு கூடுதலாக ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது

2014ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில் 16 நபர்கள் குற்றவாளிகள் என கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட 16 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட இரண்டு சிறுமிகளுக்கும் தலா ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவிகளை கடத்திய பாதிரியார் அருள்தாசுக்கு முப்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனந்த்ராஜ், பாலசுப்ரமணியம் ஆகியோருக்கு தலா நான்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கலா, தனலட்சுமி, ஸ்ரீதர், ஃபாத்திமா, மோகன்ராஜ், மதிவாணன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிரிஜாவுக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அன்புக்கு மூன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற ஐந்து பேருக்கும் பத்து முதல் இருபது ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.