காவல் நிலையத்துக்குள் பெண்ணை சுட்ட போலீஸ்: உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி!
காவல் நிலையத்துக்குள் வைத்து பெண் ஒருவரை போலீஸ் ஒருவர் துப்பாக்கியை வைத்து சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உத்தரப்பிரதேசம் அலிகரை சேர்ந்தவர் இஷ்ரத் (55). இவர் தனது பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்றுள்ளார். அப்போது, காவல் நிலையத்துக்குள் வைத்து போலீஸ் ஒருவர் அப்பெண்ணை துப்பாக்கியால் தவறுதலாக சுட்டுள்ளார். இதில், படுகாயமடைந்த அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக காவல் நிலையத்துக்கு சென்ற இஷ்ரத், தனது முறைக்காக நபர் ஒருவருடன் காத்துக் கொண்டுள்ளார். அப்போது அருகில் இருந்த காவலர் ஒருவரிடம் மற்றொரு காவலர் கைத்துப்பாக்கி ஒன்றை தருகிறார். அந்த துப்பாக்கியை அந்த காவலர் சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, அதிலிருந்து வெளிப்பட்ட தோட்டா அப்பெண்ணை பதம் பார்த்தது. இதில் அப்பெண் சரிந்து விழுந்து காயமடைந்த காட்சிகள் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் பிற்பகல் 2.50 மணியளவில் நடந்துள்ளது. இஷ்ரத்தை துப்பாக்கியால் சுட்ட காவலர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அதேசமயம், பாஸ்போர்ட் சரிபார்ப்புக்கு பொறுப்பான அதிகாரி பணம் கேட்டு இஷ்ரத்தை துன்புறுத்தியதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு, அந்த அதிகாரி அப்பெண்ணை சுட்டுக் கொன்றதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
“பாஸ்போர்ட் சரிபார்ப்பு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு இஷ்ரத் வந்திருந்தார். பணம் கேட்டு அவருக்கு ஏற்கனவே அழைப்புகள் வந்தன. அவரை யார் சுட்டுக் கொன்றார்கள் என்று தெரியவில்லை. எவ்வளவு பணம் கேட்டார்கள் என்பது தெரியவில்லை. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.” என்று அவரது உறவினர் ஜீஷன் தெரிவித்துள்ளார்.
இரவு பகல் பாராமல் புல் மப்பில் ஓயாமல் டார்ச்சர்! வலியால் துடித்த மனைவி.. ஆத்திரத்தில் கணவர் கொலை.!
இந்த சம்வவம் குறித்து அலிகர் எஸ்எஸ்பி கலாநிதி நைதானி கூறுகையில், “அலட்சியமாக செயல்பட்டதாக இன்ஸ்பெக்டர் மனோஜ் சர்மா உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்ணுக்கு மருத்துவர் குழு சிகிச்சை அளித்து வருகிறது. சிசிடிவி காட்சிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.” என்றார்.
பாதிக்கப்பட்ட பெண்ணினுடைய தலையின் பின்பகுதியில் அடிபட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். உம்ரா எனும் புனித யாத்திரைக்காக சவூதி அரேபியா செல்ல இஷ்ரத் திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.