திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த தள்ளாம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவர் சேட்டு. இவருடைய 26 வயது மகன் தாமஸ். கீழ்பென்னாத்தூரில் உள்ள ஒரு உணவகம் ஒன்றில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தாா். இந்த ஓட்டலுக்கு அருகே இருந்த ஜெராக்ஸ் கடையில் அமீா் மகள் 19 வயதான ரிஸ்வானா  வேலை செய்து வந்துள்ளார். தனியார் கல்லூரியில் படித்து வரும் இவர், விடுமுறை காரணமாக அங்கு வேலைக்கு சென்றுள்ளார்.

அப்போது, ரிஸ்வானாவுடன் தாமசுக்கு நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மலர்ந்துள்ளது. வீட்டிற்கு தெரியாமல் இருவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் தாமசுக்கு திருமணமானது பற்றி காதலிக்கு தெரியாது என கூறப்படுகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ரிஸ்வானா வீட்டிலிருந்து காணாமல் போனதாக அவருடைய தந்தை அமீா், கீழ்பென்னாத்தூா் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், ரிஸ்வானா, தாமஸ் இருவரும் கத்தாழம்பட்டு புதூா் கிராமத்தில் உள்ள மயானத்தில் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு மயங்கிக் கிடந்த இருவரையும் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் இருவரும் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். முதல்கட்ட விசாரணையில் காதலா்களுக்கு இரு வீட்டிலும் எதிா்ப்பு இருந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. திருவண்ணாமலை அருகே கள்ளகாதலர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.