உடுமலையில் ஆணவக்கொலையால் பலியான சங்கரின் மனைவி கவுசல்யா சமீபத்தில் மறுமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் மறுமணம் செய்து கொண்ட கவுசல்யாவின் போக்கு சரியில்லை எனக்கூறி தங்கள் கிராமத்தில் நுழைய அவருக்கு தடை விதித்துள்ளதால் அவர் ஊரை விட்டு கிளம்பி இருக்கிறார்.

இந்நிலையில், கோவையை சேர்ந்த நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளர் சக்தியை மறுமணம் செய்து கொண்டார். சக்தி மீது ஒரு திருநங்கை உட்பட சுயசாதி விமர்சனத்துடன் சமூக மாற்றத்துக்காக பொது வாழ்க்கைக்கு வந்த நான்கைந்து இளம் பெண்களின் வாழ்க்கையை காதல் என்னும் பெயரில் சீரழித்தது வரை குற்றச்சாட்டுகள் உள்ளது. அதிலும் ஒரு பெண்ணுடன் மாதக்கணக்கில் வாழ்ந்து அவளது ஆறு மாத கருவை வலுக்கட்டாயமாகக் கலைத்து நடுத்தெருவில் நிறுத்தியவன் எனவும் கூறப்படுகிறது. தகுந்த ஆதாரங்கள் இருந்தும் நீதி கிடைக்காமல் பல பெண்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள். 

இந்த புரட்சிகர திருமணத்தை நடத்தி வைத்திருக்கும் இயக்கங்களின் தலைவர்கள் வரை அனைவருக்குமே எல்லாமே தெரியும் எனவும் கூறப்படுகிறது. இவற்றையெல்லாம் கேள்விப்பட்ட சங்கரின் கிராமமான குமரலிங்கம் கிராமமக்கள் அதிருப்தியில் உள்ளனர். "சங்கர் மரணத்திற்கு பின் கவுசல்யா சங்கரின் குடும்பத்தோடு மிகுந்த அன்புடனும், மரியாதையுடனும் இருந்தது எங்களுக்கே சந்தோஷமாக இருந்தது. ஆனால் தற்போது அவர் நடத்தையில் சிறிய மாற்றம் தெரிகிறது. கடந்த வாரம் கூட இரண்டு பெண்கள் கவுசல்யாவின் குடும்பத்தில் வந்து தங்கினர்.

அந்தப் பெண்களைத் தேடி இரவில் போலீசார் வருகின்றனர். அவர்கள் நல்லவர்கள் என்றால் இரவில் அவர்களை ஏன் போலீஸ் தேடி வர வேண்டும்..? கவுசல்யா சில கட்சிகள், அரசாங்கத்திற்கு எதிரான அமைப்புகளோடு தொடர்பில் இருந்து அரசாங்கத்தை விமர்சிக்கிறார். இதுமட்டுமின்றி கவுசல்யா நடத்தும் பறை வகுப்புகளால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. கவுசல்யாவின் கணவர் சங்கரை கூலிப்படையை ஏவி கொலை செய்த கவுசல்யாவின் அப்பாவுக்கும், கட்டாயக் கருக்கலைப்புக்குக் காரணமான சக்தியை தெரிந்தே கல்யாணம் செய்த கவுசல்யாவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை' எனக் கொதிக்கிறார்கள் அந்த கிராமமக்கள். இதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன் சங்கரின் ஊரான குமரலிங்கத்தில், கவுசல்யாவிற்கு எதிராக கூட்டம்போட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

கவுசல்யா வீட்டில் வெளியாட்கள் வந்து தங்குவதாகவும், இவ்வளவு காலம் இந்தப் பகுதியில் நடக்காத சம்பவங்கள் நடப்பதாகவும், காவல்துறை வெளியாட்கள் வந்து தங்க அனுமதிக்க கூடாது எனவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது. சங்கரின் ரத்தம் காய்வதற்குள் கவுசல்யா திருமணம் செய்துள்ளதாகவும், கவுசல்யா எடுக்கும் திடீர் முடிவுகளால் அமைதியான இப்பகுதியில் கலவரம் நடக்கும் அபாயம் உள்ளதாகவும், சங்கரின் பெயரை வைத்து இனி எதுவும் செய்யக் கூடாது எனவும் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கவுசல்யா குமரலிங்கம் கிராமத்தில் தங்குவதில்லை எனக் கூறுகிறார்கள் அந்தக் கிராமத்தினர். குமரலிங்கம் கிராமத்தை விட்டு காலி செய்து விட்டதாகவும் கூறுகிறார்கள்.