சினிமாவை மிஞ்சிய கொலை.. போஸ்டரில் சொல்லி வச்ச மாதிரியே சோலியை முடித்த சம்பவம்.. திருச்சியில் பயங்கரம்..!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பொன்மலைப்பட்டியில் செப்டம்பர் 15-ம் தேதி மாலை, டாஸ்மாக்கிலிருந்து மது வாங்கிவிட்டு வெளியே வந்த சின்ராஜ் (22) மர்மக் கும்பலால் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
திருச்சி அருகே இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழிக்கு பழியாக இந்த கொலை நடைபெற்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பொன்மலைப்பட்டியில் செப்டம்பர் 15-ம் தேதி மாலை, டாஸ்மாக்கிலிருந்து மது வாங்கிவிட்டு வெளியே வந்த சின்ராஜ் (22) மர்மக் கும்பலால் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கொலையான சின்ராஜின் அண்ணன் சக்திவேலுக்கும், பொன்னேரிபுரம் பகுதியைச் சேர்ந்த ரவுடியான அலெக்ஸ் என்பவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது.
அதன் காரணமாக, சக்திவேலைக் கொலை செய்ய அலெக்ஸ் அவரை போட்டு தள்ள திட்டம் தீட்டியிருந்தனர். இந்நிலையில், சம்பவத்தன்று சக்திவேலும் சின்ராஜும் டாஸ்மாக்குக்கு மது வாங்க வந்திருந்தனர். அவரை பின்தொடர்ந்து வந்த அலெக்ஸ் கும்பல் சக்திவேலைக் கொலை செய்வதாக நினைத்து மாஸ்க் போட்டிருந்த அவருடைய தம்பி சின்ராஜை வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சின்ராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக அலெக்ஸ் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சின்ராஜின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் விரைவில் என்று அச்சிட்டு போஸ்டர் அடித்திருந்தனர். இந்த விரைவில் என்ற வார்த்தைக்கு பின்னணியில் ரவுடி அலெக்ஸூக்கு கொலை மிரட்டல் இருப்பதாக சர்ச்சை எழுந்திருந்தது. இந்த போஸ்டர் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், போஸ்டரில் குறிப்பிட்டிருந்ததைப்போலவே சின்ராஜின் இறப்புக்குப் பழிவாங்கும் வகையில், நேற்றிரவு பொன்மலைப்பட்டி மாவடிக்குளம் ஏ.கே.அவென்யூ பகுதியில் வைத்து சின்ராஜைக் கொலை செய்த அலெக்ஸின் தம்பி பெலிக்ஸை, 10 பேர் கொண்ட மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துள்ளது. சின்ராஜை கொலை செய்த வழக்கில் அலெக்ஸ் திருச்சி மத்திய சிறையிலிருக்கும் நிலையில், அவரைப் பழிவாங்குவதற்காக அவர் தம்பி பெலிக்ஸ் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சக்திவேல் ஆதரவாளர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியில் பழிக்கு பழியாக கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து வருவதாகக்கூறி பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.