ஒகேனக்கல்லில் காங்கிரஸ் பிரமுகர் கணேசன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே ஊட்டமலை நாடார் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். காங்கிரஸ் கட்சி பிரமுகரான இவர் விவசாயம் மற்றும் பால் விற்பனை செய்து வருகிறார். இன்று அதிகாலை பால் விற்பனை செய்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது முதலை பண்ணை அருகே 3 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து உயிரிழந்தார்.

 

கணேசனை வெட்டிக் கொன்ற பிறகு அந்த மர்ம கும்பல் தப்பிச் சென்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.  

நடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் மற்றும் சென்னையில் அடுத்தடுத்து 3 கொலைகள் அரங்கேறின. தொழில்போட்டி மற்றும் முன்விரோதம், கள்ளக்காதல் போன்ற விவரங்களில் பல்வேறு கொலைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.