கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் தஞ்சை காங்கிரஸ் பிரமுகரை தீர்த்து கட்டிய பெண் உள்ளிட்ட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

தஞ்சையை அடுத்த மருங்குளத்தை சேர்ந்தவர் சுபாஷ்சந்திரபோஸ்( 64). இவர் தஞ்சை தெற்கு ஒன்றிய காங்கிரஸ் கிராம கமிட்டி தலைவராகவும், மருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராகவும் இருந்து வந்தார். இந்நிலையில்,  சுபாஷ்சந்திரபோஸ் கடந்த 2 நாட்களுக்கு முன் அவரது தோட்டத்தில் தலையில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். 

அப்போது, அந்த வழியாக சென்றவர்கள் இதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த விசாரணையில் தஞ்சையை அடுத்த மருங்குளம் அருகே உள்ள கோபால் நகரை சேர்ந்த பூங்கொடி(45), அவருடைய கணவர் அய்யாசாமி(58), மருங்குளத்தை சேர்ந்த இளங்கோவன்(45) ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட சுபாஷ்சந்திரபோஸின் தோட்டத்தில் பூங்கொடி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது பூங்கொடி அவருடைய இடத்தின் சொத்து பத்திரத்தை அடமானமாக கொடுத்து சுபாஷிடம் ஒரு லட்சம் கடன் வாங்கியுள்ளார். பணம் வாங்கி பல மாதங்கள் ஆகியும் பணத்தை திருப்பி தராமல் பூங்கொடி காலம் தாழ்த்தி வந்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. 

இதனால், ஆத்திரமடைந்த  பூங்கொடி, கணவர் அய்யாசாமி, அவரது கள்ளக்காதலன் இளங்கோவன் ஆகியோர்  தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளனர். இதனையத்து, உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை வாழை தோட்டத்திற்கு வந்து வாங்கிக் கொள்ளும் படி பூங்கொடி கூறியுள்ளார். அப்போது, சுபாஷ்சந்திர போஸ் வாழை தோட்டத்திற்கு உள்ளே வந்த போது மறைந்திருந்த இளங்கோவன் அவரை அரிவாலாள் தலையில் பயங்கரமாக வெட்டியுள்ளார். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.  உடனே அங்கிருந்து இளங்கோவன் மற்றும் கள்ளக்காதலி ஆகியோர் தப்பிச்சென்றுவிட்டதாக  போலீசார் தெரிவித்தனர்.