தஞ்சையில் கல்லூரி மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொள்ளை கும்பலின் தலைவனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

தஞ்சை மாவட்டம் வல்லம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வந்தது. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்லும் கணவன் மனைவி, காதல் ஜோடிகள் மிரட்டி வழிப்பறி செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால், கொள்ளையர்களை பிடிப்பது போலீசாருக்கு கடும் சவாலாக இருந்தது. இதனையடுத்து, தனிப்படை அமைத்தும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சையை சேர்ந்த என்ஜினீயர் கெல்வின் என்பவரிடம் வல்லம் அருகே 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வழிமறித்து தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இது குறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். தொடர் கொள்ளையை அடுத்து அப்பகுதியில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில், அந்த வழியாக வந்த ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் தஞ்சை மானோஜி பட்டியை சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் ரமேஷ் ( 27) என தெரிய வந்தது. மேலும் தஞ்சை மற்றும் வல்லம் பகுதிகளில் 2 ஆண்டுகளாக போலீசாரிடம் பிடிபடாமல் இருந்து வந்த முகமூடி கொள்ளை கும்பல் தலைவன் எனவும் தெரிய வந்தது.

இதனையடுத்து, போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் தஞ்சை பகுதியில் கல்லூரிகளில் படித்து வரும் மாணவிகள், தங்களது காதலனை அழைத்துக்கொண்டு இந்த பகுதிக்கு வந்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதேபோல் கள்ளக்காதல் ஜோடிகளும் இந்த பகுதிக்கு வந்து இரவு நேரங்களில் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் குடிபோதையில் இருந்து வந்ததால் கள்ளக்காதல் ஜோடி மற்றும் கல்லூரி மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். மேலும், அந்த வழியாக வருபவர்களை தாக்கி நகை- பணத்தை கொள்ளையடித்து வந்தது விசாரணையில் தெரிவந்துள்ளது.