கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தாலி கட்டி ஒருவரமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பித்து வந்த மாணவி அளித்த புகாரில் அந்த நபர் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டார். 

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுக்காவில் உள்ள கே.மோரூர் கிராமத்தைச் சேர்ந்த கணேஷன்-விஜயலட்சுமி தம்பதியினருக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 

இவர் கடந்த மாதம் 28-ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். மகள்  காணாமல் போனதை அறிந்த பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து மகள் காணவில்லை என்று ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணையை நடத்தினர்.

 

இதில் கல்லூரி மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரியும் விஜய் என்ற இளைஞர் கடத்திச் சென்றது தெரிவந்தது. மேலும் மாணவியை எங்கே வைத்துள்ளார் என்று விசாரித்து வந்த நிலையில் புதன்கிழமை இரவு கே.மோரூரில் உள்ள அவரது வீட்டிற்கு மாணவி வந்துள்ளார். தொடர்ந்து இளைஞர் விஜய் தன்னை கடத்திச் சென்று தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டதாகவும், ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் இந்த மாணவி கூறியுள்ளார். 

இதையடுத்து காவல் நிலையம் வந்த மாணவியிடம் விசாரணை நடத்தி போலீசார், தாரமங்கலத்தில் பதுங்கியிருந்த விஜயை கைது செய்தனர். போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.