கும்பகோணம் அருகே கடத்தப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆவணியாபுரத்தை சேர்ந்த சாகுல்ஹமீது, துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் முகமது மும்தாசர், மயிலாடுதுறையில் உள்ள ஏவிசி பொறியியல் கல்லூரியில் பி.இ., 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று இரவு அக்கா வீட்டிற்கு செல்வதாக சென்ற முகமது மும்தாசரை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். இதனையடுத்து மும்சாதர் செல்போனில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அப்போது பேசிய மர்ம நபர் மும்சாதரை கடத்தி கோவைக்கு கொண்டு செல்வதாகவும், 5 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு மகனை மீட்டுச் செல்லுமாறு கூறியுள்ளனர். 

இதுகுறித்து உடனே அவரது தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இன்று காலை திருபுவனம் அருகே காவிரி ஆற்றங்கரையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மும்தாசரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடனே அப்பகுதிக்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.