விருத்தாச்சலத்தில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விருத்தாசலம் அருகே உள்ள கீழ்பவளங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் கருவேப்பிலங்குறிச்சி என்ற பகுதியில் வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரும், இவரின் மனைவியும் தினந்தோறும் கூலி வேலைக்கு சென்றுவிடுவார்கள். இவரது மகள் திலகவதி விருத்தாசலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மாணவி இன்று கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார்.

 

பின்னர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் தனியாக இருந்த திலகாவை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த திலகா தட்டுத்தடுமாறி தனது உறவினருக்கு செல்போனில் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனையடுத்து அவரது உறவினர்கள் வீட்டுக்கு சென்று பார்த்த போது திலகவதி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். 

உடனே உறவினர்கள் திலகவதியை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரம் தொடர்பாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.