கோவையில் 2 பள்ளிக்குழந்தைகள் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி மனோகரனின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மனோகரனின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். 

கடந்த 2010-ம் ஆண்டு கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த சிறுமி முஸ்கான், சிறுவன் ரித்திக் ஆகியோர் வாடகைக் கார் ஓட்டுநர் மோகன் ராஜ் என்பவரால் கடத்திப் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல்கள் பொள்ளாச்சி அருகே கண்டெடுக்கப்பட்டன. போலீஸ் விசாரணையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக மோகன்ராஜூம், அவரது நண்பர் மனோகரும் கைது செய்யப்பட்டனர். அக்காள், தம்பிகளான முஸ்கானும், ரித்திக்கும், அவர்களுக்கு நன்கு அறிமுகமான ஓட்டுநர்களாலேயே கடத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. இந்நிலையில், விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பியோட முயன்ற மோகன்ராஜ் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மனோகரனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மனோகரன், உச்சநீதிமன்ற தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் மனோகரனின் தூக்கு தண்டனையை உறுதி செய்து ஆகஸ்ட் 1-ம் தேதி அவரது மனுவை தள்ளுபடி செய்தது. 

இந்நிலையில், மரண தண்டனையை சீராய்வு செய்யக்கோரி மனோகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், தூக்குத் தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் மனோகரன் மீதான தூக்குத் தண்டனையை அக்டோபர் 16-ம் தேதி வரை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது மனோகரனின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து தூக்கு தண்டனையை உறுதி செய்தது.