கோவையில் தனியார் கல்லூரி விடுதியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் முதலாண்டு பயிலும் மாணவர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மலுமிச்சப்பட்டி பகுதியில் இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தன்னாட்சி கல்லூரியாக ஒரு கல்லூரியும், அண்ணா பல்கலைக்கழகத்திற் உட்பட்டு ஒரு கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் தங்கள் கல்லூரி தான் சிறந்தது என்று முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று விடுதியில் தங்கியிருந்த மாணவர்களில் சிலர் கேன்டீனுக்கு சாப்பிட சென்றனர். அப்போது மாணவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு கோஷ்டி மோதலாக மாறியது. கடும் ஆத்திரம் அடைந்த தினகரன் அஷ்ரப்பை கத்தியால் பல இடங்களில் குத்தியுள்ளார். இதில் அஷ்ரப் நிலைக்குலைந்து ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்தார். இதைப்பார்த்து அவரது நண்பர்கள் கதறினர். ரத்த வெள்ளத்தில் துடித்த அஷ்ரப் முகமதுவை உடனே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிகிச்சை பலனின்றி அஷ்ரப் உயிரிழந்தார். 

இதையடுத்து, தினகரன், சரவணகுமார், நித்திஷ்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் 3 பேரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.