கோவையில் 6 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து, கொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ்குமார் என்பவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

தமிழகத்தில் பொள்ளாச்சி விவகாரம் நாட்டையே உலுக்கி இருந்த நிலையில் அதன் தாக்கம் அடங்குவதற்குள் கோவை மாவட்டத்தில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவையை உலுக்கி இருக்கக்கூடிய மிக முக்கிய வன்கொடுமை சம்பவங்களில் ஒன்றாக துடியலூர் அருகே பனிமலை கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கு. இது தொடர்பாக கிட்டத்தட்ட 6 நாட்களாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டார்கள். கிட்டத்தட்ட 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

சிறுமியின் பெற்றோர் சந்தேகப்பட்ட நான்கு பேர் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. குறிப்பாக, சிறுமியின் வீட்டுக்கு மிக அருகில் வசித்து வந்த விஜயக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கௌதம், சதீஸ், வசந்த், சந்தோஷ், துரைராஜ் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் மக்கள் துடியலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்கள் சாலை மறியல்களில் ஈடுபட்டனர். தங்கள் பகுதிகளுக்கு வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளர்களை விரட்டி அடித்ததோடு பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சரியான நீதி கிடைக்காவிட்டால் வரும் தேர்தல்களில் எங்கள் பகுதி மக்கள் தேர்தலைப் புறக்கணிப்போம் என்றும் கொதித்தெழுந்தனர்.

 

இந்நிலையில் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்ததால் இச்சம்பவம் தொடர்பாக துப்புக் கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் உடல் மீது போத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு டி-ஷர்ட். அந்த டி-ஷர்டை வைத்தே போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த தடயத்தின் அடிப்படையிலேயே 6 நாட்களுக்கு பிறகு இந்த கொலை தொடர்புடைய தொண்டாமுத்தூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சந்தோஷ்குமாரை விசாரித்ததில் சிறுமியை வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய வயது 34. அவர் தொண்டாமுத்தூர் பகுதியை சார்ந்தவர். ஏற்கனவே திருமணமாகி அவர் தனது மனைவியை பிரிந்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இதனையடுத்து சிறுமியை பலாத்காரம் செய்து, கொன்று வெறியாட்டம் ஆடிய சந்தோஷ்குமாருக்கு மிக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் தமிழகம் முழுவதும் குரல் எழுப்பி வருகின்றனர். மேலும் அவனை எங்களிடம் ஒப்படையுங்கள் அந்த கொடூரனை அடித்தே கொன்றுவிடுகிறோம் என ஆத்திரத்தை கோவை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.