முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர்  சிவமூர்த்தி உடல் ஓசூர் கொலவரப்பள்ளி அணை அருகே மீட்கப்பட்டுள்ளது. இவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக  3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி தொழில் செய்து வந்தவர் சிவமூர்த்தி. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனைவி நளினியின் தங்கை மருமகன் ஆவார்.

இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் காணாமல் போய் விட்டார். இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஆம்பூரில் சொகுசு கார் ஒன்று நீண்ட நேரமாக நின்றுகொண்டிருந்தது.  அதன் அருகில் சந்தேகத்துக்கு இடமான வகையில் 3 பேர் நின்றிருந்தனர். அப்போது ஆம்பூர் நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார். அந்த கார் அருகே சென்றபோது அந்த 3 பேரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீஸார் விரட்டி பிடித்தனர். 

அவர்களை போலீஸார் பாணியில் விசாரித்த போது  பணம் கேட்டு சிவமூர்த்தியை கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடத்தியதாகவும் அவரை கொலை செய்துவிட்டு உடலை எங்கே வீசியெறிவது என்பது குறித்து தெரியாமல் சடலத்துடன் காரில் சுற்றி வந்ததாகவும் இறுதியாக உடலை ஓசூரில் வீசியதாகவும் கூறினர். கைதான 3 பேரும் கோவையை சேர்ந்த மணிபாரதி, விமல், கவுதம் ஆகியோர் என தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என போலீஸார் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 

கல்லு கட்டி சடலம் வீச்சு

சாலையோரம் மைல் கல்லை கட்டி சிவமூர்த்தி உடல் கெலவரப்பள்ளி அணையில் கொடூரமாக வீசப்பட்டுள்ளது. மதிக்காமல் இருப்பதற்காக மைல் கல்லை உடலுடன் சேர்த்து கட்டி உள்ளனர். கட்டப்பட்ட கல் மிகச்சிறியது என்பதால் தண்ணீரில் உடல் மிதக்கச் செய்தது.