சென்னை அயனாவரத்தில் பள்ளி சிறுமி ஒவரை 13 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்முறை செய்த சம்பவத்தில் இருந்து வடு மறைவதற்குள் புளியந்தோப்பில் மீண்டும் இதுபோல ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. 

இந்நிலையில், சென்னை புரசைவாக்கத்தில் பாட்டியுடன் கோபித்துக்கொண்டு கடந்த 3-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெபினா என்ற பெண்ணிடம் அடைக்கலம் புகுந்துள்ளார். முசினா பேகம் என்ற பெண்ணுடன் சேர்ந்து கொண்ட ஜெபினா சிறுமியை புரசைவாக்கத்தில் உள்ள நிஷா என்ற பெண்ணிடம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு மது வாங்கிக் கொடுத்து அந்த போதையில் வைத்தே அந்த கும்பல் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது. மயக்க நிலையில் இருந்த சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து 4 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே சிறுமியை காணவில்லை என கூறி அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் உடலில் காயங்களுடன் கடந்த 7-ம் தேதி சிறுமி வீட்டுக்கு வந்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தாயிடம் சிறுமி கூறியதை தொடர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் 3 பெண்களை கைது செய்த போலீசார் பாலியல் வன்கொடுமை செய்து தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

இந்நிலையில், நேற்றுதான் சிறார்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கு போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைகளை விதிக்கக்கூடிய சட்டதிருத்தங்கள் செய்யப்பட மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்குத்தண்டனை வரை நிறைவேற்றப்பட இந்த மசோதா வழிவகை செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.