உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற மகளை மாடிப்படிக்கட்டில் இருந்து கீழே தள்ளி கொடூரமாக சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் சிறுமியின் தந்தை மற்றும் சித்தியை கைது செய்துள்ளனர். 

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த ஆயர்பாடியை சேர்ந்தவர் சங்கர். இவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூருக்கு வேலைக்காக  சென்ற போது அங்கு பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சவுமியா (5) என்ற பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சங்கரை பிரிந்து பிரியா தஞ்சாவூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். குழந்தை சவுமியாவை சங்கரிடமே விட்டுவிட்டு சென்றார். 

இதனால், மகளை வளர்க்க முடியாததால் தந்தை சங்கர், குழந்தையை தாத்தா வீட்டில் விட்டு வைத்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த சந்தியா (21) என்பவரை சங்கர் 2-வது திருமணம் செய்துகொண்டு வாலாஜா டோல்கேட் அருகில் உள்ள முசிறியில் குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில், தாத்தா வீட்டிலிருந்து சிறுமி சவுமியாவை கடந்த 10-ம் தேதி தன் வீட்டுக்கு சங்கர் அழைத்து சென்றார். 

மறுநாள் சிறுமி சவுமியா வாலாஜா அரசு மருத்துவமனையில் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தியை கேட்டு விரைந்தார். இது தொடர்பாக மருத்துவரிடம் விசாரித்த போது சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியதால் தாத்தா அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் தாத்தா புகார் கொடுத்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தந்தை சங்கர், சித்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

இதில், அவர்கள் பல்வேறு திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். அதில், எங்கள் உல்லாசத்துக்கு சிறுமி சவுமியா தடையாக இருந்தாள். இந்த ஆத்திரத்தில் சவுமியாவை கட்டையால் தாக்கி மாடிப்படியில் இருந்து கீழே பிடித்து தள்ளினோம். படிக்கட்டில் இருந்த கூர்மையான பகுதி சவுமியாவின் நெஞ்சுக்குழியில் குத்திக்கொண்டது. மேலும் தலையிலும் பலமாக அடிபட்டு மயக்கமடைந்தாள். உயிர் இருக்கிறது என்ற சந்தேகத்தில் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து, குழந்தை கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக மருத்துவரிடம் தெரிவித்தோம். சவுமியாவை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இவ்வாறு அவர்கள் கூறினர். இதனையடுத்து, தந்தை சங்கர், சித்தி சந்தியா ஆகிய இருவரையும் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.