ஊரடங்கு காலக்கட்டத்தில் 17 வயது சிறுமிக்கு திருமண ஆசைக் காட்டி அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த மாதம் 25-ம் தேதி திடீரென மாயமானார். சிறுமியை பல இடங்களில் உறவினர்கள் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து 28-ம் தேதி புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

அப்போது, சிறுமியை காதலித்து வந்த தேவஅருள், பெற்றோர்கள் நம் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள மாட்டர்கள் நாம் எங்காவது சென்று திருமணம் செய்து வாழலாம் என ஆசை வார்த்தைகள் கூறி 17 வயது சிறுமியை அழைத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து,  சிறுமி மற்றும் இளைஞர் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. பின்னர், போலீசார் பெங்களூரு சென்று இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் தேவஅருள் தன்னை பலவந்தமாக பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாகவும் சிறுமி கதறியபடி கூறியுள்ளார். இதையடுத்து தேவஅருள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த மகளிர் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.