சென்னை பள்ளிக்கரணை அருகே தம்பியை பழிதீர்க்க சென்ற இடத்தில் அண்ணன் சரமாரியாக வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை பள்ளிக்கரணை அடுத்த வேங்கைவாசல் பெரியார் நகரை சேர்ந்தவர் கிருபாகரன்(24) எலக்ட்ரீசியன். இவரது தம்பி ரமேஷ் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள தெருவில் நடந்து சென்றார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த அதே பகுதி சேர்ந்த ஜானி உள்ளிட்ட சிறுவர்களிடம் எதற்காக சாலையில் விளையாடுகிறீர்கள். ஓரமாக விளையாடுங்கள் என்று கூறியுள்ளார். அதோடு ஜானியில் தலையில் கையால் லேசாக தட்டியுள்ளார்.  

 இதனால் கோபமடைந்த ஜானி தனது நண்பரை அழைத்துக்கொண்டு ரமேஷ் வீட்டுக்கு சென்று கேட்டுள்ளார். அதற்கு இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களது நன்மைக்காகத்தானே சொன்னேன் என்றார். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. இதனால், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த ரமேஷ். வீட்டில் இருந்த ஒரு பாட்டிலை எடுத்து ஜானியின் கையில் கிழித்துள்ளார். இதனால், பயந்து போன நண்பர்கள் ஜானியை சமாதானம் செய்து அழைத்து சென்றனர். 

 இருப்பினும் ஆத்திரம் தீராத ஜானி உள்ளிட்ட 6 பேர் இரவு 9 மணியளவில் ரமேஷ் வீட்டுக்கு வந்தனர். அங்கு ரமேஷ் இல்லாததால் அவரது அண்ணன் கிருபாகரன் வீட்டுக்கு சென்று தகராறு செய்தனர். வாக்குவாதம் முற்றியதில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக கிருபாகரனை வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.