சென்னை தியாகராயநகரில் உள்ள நகைக்கடையில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து பரபரப்பாகக் காணப்படும் தியாகராயநகர் பகுதியில், உள்ள மூசாதெருவில், 'உத்தம்' நகைக்கடை 15 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடையில் மொத்த விற்பனை நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல கடையை திறப்பதற்காக வந்த நகைக்கடை உரிமையாளர்கள் சென்ற போது கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

கடையில் இருந்து 4 கிலோ தங்கம், 15 தங்க கட்டிகள், வெள்ளி கட்டிகள், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கொள்ளை தொடர்பாக நகைக்கடை உரிமையாளர் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, வழக்கு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.