சென்னையை அடுத்த பூந்மல்லியில் 6 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை செய்து தீ வைத்து எரித்த கொலைக்காரி தாயை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை பூந்தமல்லி கரையான்சாவடி, ஆவடி சாலையில் வசிப்பவர் ராஜேஷ்வரி. இவரது மகள் மீனாட்சி (27). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரியை சேர்ந்த சரவணன் (32) என்பவரை மீனாட்சி காதலித்து திருமணம் செய்துகொண்டார். தம்பதிக்கு ஜெயகாந்த் (6) என்ற மகன் உள்ளார். கணவன் - மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு, தனது பிறந்த வீட்டிற்கு மகனை அழைத்துக் கொண்டு மீனாட்சி செல்வது வழக்கமாக கொண்டுள்ளார்.

 

இதுபோல கடந்த 27-ம் கணவனுடன் சண்டையிட்டு பெற்றோர் வீடு உள்ள கரையான்சாவடிக்கு மீனாட்சி சென்றுள்ளார். ஆனால் பெற்றோர் அவரை வீட்டில் அனுமதிக்கவில்லை. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இதனையடுத்து வீட்டின் பின்புறம் உள்ள மோட்டோர் ரூம் போன்ற அறையில் தனது மகனுடன் மீனாட்சி தங்கியுள்ளார்.

இன்று காலையில் மீனாட்சி மாயமான நிலையில், வீட்டின் கழிவுநீர் தொட்டியில் இருந்து உடல் எரிந்து போன துர்நாற்றம் வீசியது. உடனே அவரது பெற்றோர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தொட்டியில் இருந்து எரிந்த நிலையில் மீனாட்சியின் மகன் ஜெயகாந்தன் உடல் கண்டெடுக்கப்பட்டது. 

இந்நிலையில், மொட்டை அடித்த படி வீட்டிற்கு திடீரென வந்த மீனாட்சி தனது மகனைக் கொலை செய்தது தான் என கூறி அனைவரையும் அதிர்ச்சியடை செய்தார். மகன் ஜெயகாந்த் தூங்கி கொண்டிருந்தபோது கொலை செய்து விட்டு வீட்டின் பின்புற பகுதியில் இருந்த கழிவுநீர் தொட்டியில் சடலத்தை போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி  தீ வைத்து எரித்ததாக மீனாட்சி தெரிவித்தாக கூறப்படுகிறது. பின்னர், தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து உள்ளார். ஆனால் தற்கொலை செய்து கொள்வதற்கு பயமாக இருந்ததால், தற்கொலை செய்து கொள்ளாமல் இருந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மகனைக் கொலை செய்து மொட்டை அடித்த நிலையில் காணப்படுவதால் மகனை கொலை செய்துவிட்டு மொட்டை அடித்தாரா? வரும்போது மொட்டை அடித்தாரா? என்பது தெரியவில்லை. மீனாட்சி முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறி வருவதால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.