கொருக்குப்பேட்டையில் பிரபல ரவுடியின் மகனை மர்ம கும்பல் ஓடஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கொருக்குபேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பிரபல ரவுடி விஜயன். இவருடைய மகன் பாலு(30). ஆட்டோ டிரைவர். இவர் மீது கொலை முயற்சி, அடிதடி வழக்கு என பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் பட்டாக்கத்திகளுடன் வந்தது. இதை பார்த்த பாலு அங்கிருந்து தப்பி ஓடினார். அப்போது, அந்த கும்பல் அவரை விடாமல் ஓடஓட விரட்டி சென்று  தலையில் சரமாரியாக வெட்டியது.

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே  துடிதுடித்து உயிரிழந்தார். அதன் பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது. இந்த கொலை தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாலு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த தென்னரசு, இளவரசு ஆகியோர் தலைமையில் வந்த கும்பல் இந்த கொலை அரங்கேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தனிப்படை அமைத்து தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.