சென்னை சிந்தாதிரிப்பேட்டையில், வீடு புகுந்து ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சிந்தாதிரிப்பேட்டை படவட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழ் என்ற தமிழரசன் (37). இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், பெயிண்டர் வேலை செய்து வரும் இவர் நேற்று இரவு 9 மணி அளவில் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டிற்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல், தமிழரசனை சரமாரியாக வெட்டியது.

உடலில் பல இடங்களில் தமிழரசனுக்கு வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அவர் உயிருக்கு போராடினார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தமிழரசனை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தமிழரசன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பே சசி என்பவரை கொலை செய்துள்ளார். இது தொடர்பாக தமிழரசனுக்கும், பாம்பே சசியின் உறவினரான இமானுக்கும் இடையே முன்வகை இருந்து வந்துள்ளது.  இதனை தீர்த்துக் கொள்ளும் வகையிலேயே, இமான் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தமிழரசனை கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். தலைமறைவாக உள்ள கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். தமிழரசன் கொலை காரணமாக சிந்தாதிரிப்பேட்டையில் பதற்றம் நிலவி வருகிறது.