சென்னையில் பிரபல ரவுடியை 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். 

சென்னை புளியந்தோப்பு டிம்லர்ஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (எ) நாய் ரமேஷ் (34). இவருக்கு திருமணமாகி சரண்யா என்ற மனைவி மற்றும் அனுஷியா, ஷாம் என்ற மகள், மகன் உள்ளனர். இந்நிலையில், பேசின்பிரிட்ஜ் குருசாமி நகர் 5வது தெரு வழியாக ரமேஷ் நடந்து வந்தபோது, 2  இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் ரமேஷை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது. 

இதனையடுத்து,  ரமேஷ் உயிர் பயத்தில் தலைதெறிக்க ஓடினார். ஆனால், அக்கும்பல் விடாமல் ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிந்தார். பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து சென்றது. இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ரவுடி சிவராஜியின் கூட்டாளிகள் விஜி என்கிற விஜயகுமார், கார்டன் சரத் உட்பட 5 பேர் முன்விரோதம் காரணமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான விஜி மற்றும் அவரது கூட்டாளிகள் 7 பேர் நேற்று மாலை செங்குன்றம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். பின்னர்,புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.