பிரபல ரவுடி அப்பு என்ற தினேஷ் கொலை தொடர்பான கைதான 6 பேர் போலீசாரிடம் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக இதுவரை 5 பேர் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூர் அடுத்த அகரம் கோவிந்தராஜூலு தெருவை சேர்ந்தவர் அப்பு என்ற தினேஷ் (28). பிரபல ரவுடியான இவன் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது. இதனையடுத்து அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த வாரம் தான் ஜாமீனில் இருந்து வெளியே வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தினேஷ் தனது காதலியுடன் புளியந்தோப்பு நோக்கி சென்றுக்கொண்டிருநத போது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி சாய்த்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தினேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

 

இந்நிலையில், சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்ற கோண சதீஷ் (25), சசி என்ற சசிகுமார் (23) ஆகியோரை நேற்றுமுன்தினம் இரவே போலீசார் அகரம் பகுதியில் சுற்றி வளைத்து கைது  செய்தனர். பின்னர், இவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கூட்டாளிகளான அயப்பாக்கத்தை சேர்ந்த சரவணன் (24), கோகுல் என்கின்ற கோகுல்ராஜ் (23), அகரம் பகுதியை சேர்ந்த மோனீஷ் (20) மற்றும் முக்கிய குற்றவாளியான அகரம் பார்த்தசாரதி தெருவை சேர்ந்த கதிர் என்ற கதிரவன் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ‘கடந்த 2012-ம் ஆண்டு அப்பு கூட்டாளிகளுக்கும், கதிர் கூட்டாளிகளுக்கும் கிரிக்கெட் விளையாட்டின்போது தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் அப்பு கூட்டாளிகளான கோபிநாத், தாமோதரன், ரூபன் ஆகியோரை கதிர் தரப்பு வெட்டி சாய்த்தது. அதில் மிச்சமிருந்தது ரவுடி அப்பு என்ற தினேஷ் மட்டும்தான். அவனை உயிரோடு விட்டால் தங்களுக்கு ஆபத்து என்று நினைத்த கதிர் கும்பல் நேற்று முன்தினம் இரவு தினேஷை வெட்டி சாய்த்தது. அதேபோல கதிர் கூட்டாளிகளான ராஜி என்ற ராஜேஷ், சின்னா ஆகியோரை தினேஷ் தரப்பு வெட்டி கொலை செய்துள்ளது.