சென்னையில் யார் தாதா என்பது போட்டியின் காரணமாகவே பிரபல ரவுடி அழகுமுருகன் (27) கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவலை வாக்குமூலமாக அளித்துள்ளனர். 

சென்னை ஜெ.ஜெ.நகர் பாடி புதுநகர் 13-வது தெருவை சேர்ந்தவர் அழகுமுருகன் (27). பிரபல ரவுடியான இவர் மீது 2014-ம் ஆண்டு சிவலிங்கம் என்பவரை கொலை செய்த வழக்கு ஒன்றும், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த எதிர் தரப்பை சேர்ந்த ரவுடி மோகன் (25) என்பவருக்கும் அழகுமுருகனுக்கும் இடையே ஜெ.ஜெ.நகர் பகுதியில் ‘யார் தாதா’ என்பதில் கடந்த 4 ஆண்டுகளான போட்டி இருந்து வந்தது. 

இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் ரவுடி அழகுமுருகன், தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் 5 கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து ஓட ஓட சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அழகுமுருகன் சம்பவ இடத்திலேயே துடிதடித்து உயிரிழந்தார். இதனை நேரில் கண்ட அப்பகுதி மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரவுடி அழகுமுருகனை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், யார் தாதா என்ற பிரச்னையில் அதே பகுதியை சேர்ந்த ரவுடி மோகன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அழகு முருகனை கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து, தலைமறைவாக இருந்த ரவுடி மோகன் மற்றும் அவனது கூட்டாளிகளான தமிழ்செல்வன் (19), டெனியல் (19), பச்சை கிளி (19), விக்னேஷ்(19) ஆகிய 5 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுதொடர்பாக ரவுடி மோகன் அளித்த வாக்குமூலத்தில் ஜெ.ஜெ.நகர்  பாடி புதுநகர் பகுதியில் யார் பெரிய தாதா என்பதில் கடந்த 4 ஆண்டுகளாக இருவருக்கும் பிரச்னை இருந்து வந்தது. இதனால் ரவுடி அழகுமுருகனுக்கும், ரவுடி மோகனுக்கும் இடையே அடிக்கடி தகராறும் மோதலும் நடந்து வந்தது. இதுகுறித்து ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் வழக்கும் உள்ளது.

இந்நிலையில், தனக்கு போட்டியாக உள்ள ரவுடி அழகுமுருகனை கொலை செய்ய மோகன் தனது நண்பர்களுடன் தீட்டம் தீட்டினான். இதற்கிடையே ஜெ.ஜெ.நகர் பகுதியில் நடக்கும் கட்டப்பஞ்சாயத்துக்கள் எல்லாம் தாதாவாக இருந்த ரவுடி அழகு முருகனிடம் தான் சென்றது. இது மோகனுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. இனி அழகுமுருகனை விட்டுவைத்தால் இந்த பகுதிக்கு தாதாவாக வரவே முடியாது என முடிவு செய்து, தனது ஆட்களை வைத்து அழகுமுருகனை கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.