சென்னையில் சுனாமி குடியிருப்பை சேர்ந்த பிரபல ரவுடியை வீடு புகுந்து மனைவி கண்முன்னே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த பிரபல ரவுடி பாண்டியன். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சின்ன மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த யாதவ சங்க தலைவர் பாண்டியமணி என்பவரை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி இருந்து வந்தவர். 

இந்நிலையில், நேற்று பிற்பகலில் வீட்டில் கதவை தாழ்ப்பால் போட்டுக்கொண்டு டிவி பார்த்து கொண்டிருந்தார். அப்போது, 7 பேர் கொண்ட மர்ம கும்பல் கையில் பயங்கர ஆயுதங்களுடன் பாண்டியன் வீட்டு கதவை பலமாக தட்டியுள்ளது. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த பாண்டியன் கதவை திறக்காமல் தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது கதவை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்த அந்த மர்ம கும்பல் வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்தினர்.

 

 பின்னர், மனைவி கண்முன்னே பாண்டியனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்தது. இந்த கொலை தொடர்பாக எண்ணூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.