குடிக்கும் போது இரண்டு ரவுடிகளுக்கிடையே ஏற்பட்ட தகறாறில் அமுல்ராஜ் என்ற ரவுடி வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தாம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேற்கு தாம்பரம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அமுல்ராஜ் (39), பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது நண்பர் மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரத்தை சேர்ந்த வேலு (40), பிரபல ரவுடி. இவர் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

கடந்த சில நாட்களுக்கு முன், வேலுவை அமுல்ராஜ் பேச அழைத்தார். ஆனால் வேலு அமுல்ராஜை சந்திக்க செல்லவில்லை. நேற்று மாலை தாம்பரம் ரங்கநாதபுரம் 4வது தெருவில் இருக்கும் ஏரிக்கரையில் வேலு நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த அமுல்ராஜ், வேலுவுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். 

அப்போது இருவரும் தன்னை அறியாமல் மது போதையில் இருந்து வந்தனர். அப்போது போன் செய்தால் எடுக்க மாட்டியா? எனக் கேட்டு அமுல்ராஜ் தகராறில் ஈடுபட்டு வேலுவை எட்டி உதைத்துள்ளார். உடனே வேலுவும் அவரது நண்பர் ரமேஷ் (35) என்பவரும் சேர்ந்து அமுல்ராஜை கட்டையால் அடித்து துவைத்தனர். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அமுல்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதையடுத்து, வேலு மற்றும் அவரது நண்பர் ஏரிக்கரையில், அமுல்ராஜ் சடலத்தை தள்ளிவிட்டு தப்பி சென்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கூட்டாளிகள் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.