தமிழகத்தில் அவ்வப்போது ரவுடிகள் சுட்டுக் கொல்லப்படுவது வாடிக்கையாக உள்ளது. அண்மைக்காலமாக என்கவுன்டர் என்பதே இல்லாமல் இருந்தது. இந்நிலையில் சென்னை கொரட்டூரில் இன்று ஒரு ரவுடி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

விழுப்புரத்தை சேர்ந்தவர் ரவுடி மணிகண்டன். இவர் மீது 8 கொலை வழக்குகள் உட்பட 27 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை போலீசார் கடந்த 3 மூன்று வாரங்களாக தேடி வந்தனர். இந்நிலையில் மணி சென்னை கொரட்டூரில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதையடுத்து விழுப்புரம் எஸ்.ஐ. பிரபு தலைமையில் போலீஸார் ரவுடி மணியை பிடிக்கச் சென்றனர். போலீசார் வருவதை அறிந்த மணி அங்கிருந்து தப்ப முயன்றார்.

அவரை சுற்றிவளைத்து போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது, பிடிக்க சென்ற இடத்தில், எஸ்.ஐ. பிரபுவை ரவுடி மணி கத்தியால் குத்தினார். இதனால் போலீஸார் மணியை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டு என்கவுன்டர் செய்தனர். இதில் ரவுடி மணி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். 

ரவுடி மணிகண்டன் மற்றும் ரவுடி பூபாலன் இடையேயான மோதலில் இதுவரை 21 கொலைகள் நடந்திருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.