கோடம்பாக்கம் ஜெயக்குமார், மதுரவாயல் அக்பர், புழல் ஸ்ரீதர், தேனாம்பேட்டை சபீர், ராயபுரம் தேவி, காசிமேடு பிரமோத், வளசரவாக்கம் ஜெயபாண்டி, அரும்பாக்கம் எத்திராஜ் இந்த ஒன்பது பேரும் இன்று ஒரே நாளில் தங்கள் செல்போன்களை  திருடர்களிடம் பறிகொடுத்த அப்பாவிகளாவர்.

சென்னை வாசிகளே உஷார்... மேற்கண்ட 9 பேரும் ஆசை ஆசையாக பணத்தை சேமித்து வாங்கிய உயர்தரமான சேம்சங், ஆப்பில் ஐபோன், நோக்கியா, வைவோ போன்ற மொபைல் போன்களை பறிகொடுத்து விட்டு நிற்கின்றனர். ஏதோ... காங்கோ, உகாண்டா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில்  நடந்து செல்பவர்களிடம் வலுக்கட்டாயமாக, கூலாக பையைப் பிடிங்கிச் செல்வது வழக்கமான ஒரு நிகழ்வாகும். அதுபோன்ற சம்பவங்கள் தற்போது சென்னையிலும் கொடிகட்டி பறக்கின்றன. 

செல்போன் பறிகொடுத்த இந்த ஒன்பது பேரும்... இரவு ஒரு மணியோ, இரண்டு மணிக்கோ பறிகொடுத்தவர்கள் அல்ல. இன்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணிக்குள் செல்போன் பறிகொடுத்துவிட்டு போலீசில் புகார் கொடுத்தவர்களின் பட்டியலாகும். இதில், கோடம்பாக்கம் ஜெயக்குமாரின் கதை வித்தியாசமானது. ஊபர் கால் டெக்சிக்கு புக் செய்து விட்டு, அந்த வண்டியின் எண் கூட தெரியாமல், கார் நெம்பரை குறிப்பபெடுப்பதற்காக பார்த்துக் கொண்டிருந்தபோது, தன்னிடம் இருந்த செல்போனை திருடர்கள் பிடுங்கிக் கொண்டு தப்பிச் சென்றனர்.

முன்பெல்லாம் வியாசர்பாடி, பெரம்பூர், பேசின்பிரிட்ஜ் ரயில்களில் படியில் பயணிப்போரிடம் இருந்து செல்போன்களை கம்புகளைக் கொண்டு அடித்து பறிப்பது வாடிக்கை. தற்போது ரயில் பயணிகள் உஷாரான நிலையில், பேருந்து பயணிகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் இதில் சிக்கி கொண்டுள்ளனர்.

பெரும்பாலூம் டூவீலரில் வரும் செல்போன் திருடர்கள், பாரபட்சம் பார்க்காமல் கையில் இருந்து செல்போன்களை வலுக்கட்டாயமாக பிடுங்கி சென்று விடுகின்றனர். இன்று ஒரே நாளில் மட்டும் 9 வெவ்வேறு நபர்களிடம் செல்போன்கள் பிடுங்கி செல்லப்பட்டிருப்பது சென்னையில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இனி வெளியில் செல்லும் சென்னை வாசிகளே இனி உஷார்... உஷார்...!