சென்னை கிண்டியில், வாஷிங் மெஷின் ட்யூப்பால் மனைவியின் கழுத்தை நெறித்து கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கிண்டி, மடுவின்கரை மசூதி காலனியை சேர்ந்தவர் பிரசாத். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு 5 வயதில் பூஜா என்ற பெண் குழந்தை உள்ளது. கணவன்- மனைவி இருவரும் அதேப் பகுதியில் தோசை மாவு விற்கும் தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆந்திராவில் வசிக்கும் உஷாவின் சகோதரி நளினி, செல்ஃபோனில் தனது தங்கை உஷாவை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது போனை எடுத்த உஷாவின் கணவர் பிரசாத், உஷா தூங்குவதாக கூறியுள்ளார். இதனால் அப்போது போனை வைத்த நளினி நேற்று மீண்டும் போன் செய்துள்ளார்.

அப்போது, உஷாவின் செல்ஃபோனை எடுத்த ஒருவர், உஷாவிற்கு உடம்பு சரியில்லாதால் மடுவின்கரையில்  இருப்பதாகவும், அவரது கணவர் குழந்தையுடன் சித்தூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு  சென்றுவிட்டதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த நளினி, கிண்டியில் உள்ள தனக்கு தெரிந்த நண்பரிடம் விவரத்தை கூறி தங்கையின் வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். அதன்படி அவர்கள் உஷா வீட்டுக்கு சென்றுப் பார்த்தனர். அங்கு உஷா, மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை.

இதுகுறித்து நளினிக்கு தகவல் தெரிவிக்க அவர் அதிர்ந்துப் போனார். இதையடுத்து  உஷாவின் உறவினர்கள் கிண்டி போலீசில் புகார் செய்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உஷாவின் சடலத்தை கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கணவர் பிரசாத்தை தேடிவந்தனர். இந்நிலையில், பிரசாத்தின் குடும்ப உறுப்பினர்களே போலீசாருக்கு போன் மூலம் தலைமறைவான பிரசாத் சென்னை வருவதாக தகவல் தெரிவித்தனர். பின்னர் கோயம்பேடு அருகே பிரசாத்தை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, ‘கணவன் - மனைவி இருவரும் இட்லி, தோசை மாவு விற்கும் தொழில் செய்து வந்த நிலையில், இட்லி மாவில் ரேஷன் பொருள்  கலக்கலாம் என மனைவி உஷா கூறியுள்ளார். அதற்கு பிரசாத், ரேஷன் பொருள் கலந்தால் நமது பெயர் கெட்டுபோய்விடும் என கூறியுள்ளார். இதனால், தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த பிரசாத், மனைவி உஷாவின்  கழுத்தை  வாஷிங்மெஷின் பைப்பால் நெறித்து கொலை செய்துவிட்டு, தனது பெற்றோர் இருக்கும் சித்தூருக்கு குழந்தையுடன் சென்றுள்ளார்.

அங்கு குழந்தையை தனது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு நடந்த சம்பவத்தை அவர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்தே பிரசாத்தின் குடும்ப உறுப்பினர்களே போலீசாருக்கு தகவல் தெரிவித்தது’தெரியவந்தது. மேலும் சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் இந்த தம்பதி சண்டையிட்டு வந்துள்ளனர். இட்லி மாவு வியாபாரத்தில் கணவர் தேவையில்லாமல் செலவு செய்வதாக உஷா குற்றஞ்சாட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. கைதுசெய்யப்பட் பிரசாத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.