சென்னை வில்லிவாக்கத்தில் வழக்கறிஞர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ்(45) இவர் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியாற்றி வருகிறார். இவர் சென்னை பெரம்பூர் பட்டியல் சாலையில் அலுவலகம் வைத்திருந்தார். இவர் நேற்று இரவு வில்லிவாக்கம் மோகன் ரெட்டி மருத்துவமனையின் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். 

அப்போது அந்த வழியாக வந்த 8 பேர் கொண்ட கும்பல் வழக்கறிஞர் ராஜேஷை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தனர். உயிர் பயத்தில் அவர்களிடம் தப்பிக்க முயற்சித்தார். ஆனால், அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை நேரில் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஒட்டம் பிடித்தனர். உடனே வில்லிவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து முதல் கட்ட விசாரணையில் பல ஆண்டுகளுக்கு முன்பு வழக்கறிஞர் ரஜினி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் என கூறப்படுகிறது. ஆகையால் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதாக என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வழக்கறிஞர் ராஜேஷ் மக்கள் ஆளும் அரசியல் கட்சியின் மாநில தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.